Tamilசெய்திகள்

ராகுல் காந்தி மீண்டும் தலைவராவதற்கு காங்கிரஸார் எதிர்ப்பு!

பாராளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.

தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சோனியா தற்காலிக தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். ஆனால் தலைவர் பதவியில் விறுவிறுப்பாக செயல்பட அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களாக கோரிக்கை எழுந்துள்ளது. சில மாநில தலைவர்கள் ராகுலை உடனே தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறிக்கை விடுத்துள்ளனர். இதனால் ராகுல் மீண்டும் தலைவர் ஆகக்கூடும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ராகுலை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ராகுல் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்தித்தால் தோல்விதான் ஏற்படும் என்று கூறி உள்ளனர்.

குறிப்பாக இளம் தலைவர்கள் இடையே ராகுலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மோடிக்கு சவால் விடும் வகையில் ராகுலின் செயல்பாடுகள் இல்லை என்று சில மூத்த தலைவர்கள் மறைமுக எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ராகுலை சுற்றி இருப்பவர்கள் அவரை தவறான பாதையில் வழி நடத்துவதாகவும், சில மூத்த தலைவர்களிடம் அதிருப்தி நிலவுகிறது. அந்த தவறான நபர்கள் மூலம் ராகுலுக்கு வீழ்ச்சிதான் ஏற்படும் என்றும் அந்த காங்கிரஸ் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

மாநில கட்சிகளுடன் கூட்டணி வி‌ஷயங்களில் ராகுல் காந்திக்கு முடிவு எடுக்க தெரியவில்லை என்றும் அதிருப்தியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். வேட்பாளர் தேர்வும் சரியான முறையில் நடைபெறவில்லை என்றும் கூறி உள்ளனர்.

மாநில தலைவர்கள் மூலம்தான் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்து இருப்பதாகவும், ராகுல் மூலம் எந்த மாநிலத்திலும் செல்வாக்கை உருவாக்க இயலவில்லை என்றும் எதிர்ப்பு தலைவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக சில மாநில தலைவர்களும் ராகுல் தலைமைக்கு தொடர்ந்து மறைமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ராகுல் காந்தியை அடிக்கடி சந்தித்து பேச முடியவில்லை என்று அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் கட்சி பணிகளை எப்படி செய்ய முடியும்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ராகுல் மீண்டும் தலைவராக கட்சிக்குள் திடீர் எதிர்ப்பு உருவாகி இருப்பது சோனியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் மீது அதிருப்தியில் இருப்பவர்களை சமரசம் செய்யும் முயற்சிகள் தொடங்கி உள்ளன.

எனவே இன்னும் சில மாதங்களில் ராகுல் மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *