அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக இன்று (வெள்ளிக்கிழமை) தேனி வருகிறார். அவர் கலந்து கொள்ளும் பிரசார பொதுக் கூட்டம் தேனி அன்னஞ்சி விலக்கு பகுதியில் நடக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை, ஹெலிகாப்டர் இறங்குதளம் போன்றவை அமைக்கும் பணி நடந்தது.
ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் அமருவதற் காக 70 அடி நீளம், 30 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வந்தது. இதற்காக 20 அடி உயரத்தில் மேற்கூரை பந்தல் அமைக்கும் பணி நடந்தது.
இந்த பணி நேற்று மாலையில் நடந்து கொண்டு இருந்தபோது, திடீரென மேடை சரிந்தது. மேலும் மேற்கூரைக்காக இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்டு இருந்த நிலையில் அவையும் சரிந்து விழுந்தன. அப்போது அங்கு தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். கம்பிகள் சரிந்து விழுந்தபோது மேடையின் மீது 2 தொழிலாளர்கள் நின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த தொழிலாளர்கள் 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேடை சரிந்து விழுந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் மத்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் அங்கு வந்து பார்வையிட்டனர்.
இதையடுத்து மேடையின் நீளம், உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீளத்தை 70 அடியில் இருந்து 40 அடியாக குறைக்கவும், உயரத்தை 20 அடியில் இருந்து 16 அடியாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. திட்டமிட்டபடி இன்று மாலையில் பிரசார பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதற்காக கூடுதல் தொழிலாளர்கள் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.