Tamilசெய்திகள்

ராகுல் காந்தி நாட்டுக்காக உயிரை விடவும் தயாராக உள்ளார் – பிரியங்கா காந்தி பேச்சு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரசாரம் ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார்.

இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று முன்தினம் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசுகையில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தன்னை பற்றி இதுவரை 91 முறை அவதூறாக பேசி உள்ளதாக கூறினார். இந்த நிலையில் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தன்னை பற்றி 91 முறை அவதூறாக பேசியதாக கூறி உள்ளார். அந்த அவதூறு புகார்கள் ஒரே பக்கத்தில் அடங்கிவிடும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் குறித்து கூறப்பட்ட அவதூறுகளை பட்டியலிட்டால் புத்தகங்களாக தயாரித்து அவற்றை பதிப்பித்துவிடலாம்.

பொதுமக்களை சந்திக்கும் பிரதமர்கள், மக்களின் பிரச்சினைகளை குறித்து கேட்காமல், தனது வேதனைகளை மட்டுமே கூறுகிறார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டுக்காக குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாட்டிற்காக கடினமாக உழைத்தனர். ஆனால் பிரதமர் மோடி மட்டுமே மக்கள் முன்பு தன்னை பற்றி கூறி அழுகிறார். தைரியம் இருக்கிறதா.

எனது சகோதரர் ராகுல் காந்தியிடம் கற்று கொள்ளுங்கள். நீங்கள் வேதனையாக பேசினாலும், துப்பாக்கியால் சுட்டாலும், கத்தியால் குத்தினாலும் எனது சகோதரர் ராகுல் காந்தி சத்தியத்தின் வழியில் செல்வார். ராகுல் காந்தி, நாட்டுக்காக துப்பாக்கி குண்டு வாங்கி உயிரை விடவும் தயாராக உள்ளார்’ என்றார்.