ராஜஸ்தான், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ்- பா.ஜனதா கட்சி தலைவர்கள் வளர்ச்சியை பற்றி பேசியதை விட, ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து பேசியது தான் அதிகம் என்றால் அது மிகையாகாது.
அவ்வாறு விமர்சனம் செய்யும்போது, பயன்படுத்தும் சில வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளாகி விடும். அப்படித்தான் ராகுல் காந்தில் தேர்தல் பிரசாரத்தின்போது, ஏற்கனவே மோடி குறித்து பேசிய வார்த்தை சர்ச்சைக்குள்ளானது. அதன் காரணமாக நீதிமன்றத்தை சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிரசாரத்தின்போது மோடிக்கு எதிராக பிக்பாக்கெட் (pickpocket), அபசகுணம் (Pannauti) ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பா.ஜனதா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. தேர்தல் ஆணையமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே, ராகுல் காந்தி ஒரு போராளி, கண்ணியமான வகையில் பதில் அளிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ”ராகுல் காந்தி வலிமையான மற்றும் நேர்மையான தலைவர். அவர் கண்ணியமான, நேர்மையான பதிலை அளிப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு போராளி. அவரால் பயமின்றி இருக்க முடியும். ஏனென்றால் அவர் நேர்மையானவர். ராகுல் காந்தியின் குடும்பம் பற்றி பா.ஜனதா பேசியதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். ஆகவே, தற்போது ராகுல் காந்தி சில விசயங்களை பேசும்போது, அதை ஏன் அவர்கள் மோசமானதாக உணர்கிறார்கள். ராகுல் காந்தியின் தாத்தாவின் அப்பாவை பற்றி கூட பேசியிருக்கிறார்கள்.