திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு துணை தலைவர் மயிலை அசோக்குமார் குஷ்பு பெயரில் விருப்ப மனுவை கொடுத்தார்.
இந்த தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என்று கடந்த ஒரு மாதமாகவே பேச்சு அடிபட்டது. தென் சென்னை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தென் சென்னை தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே அவர் திருச்சி தொகுதியை விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியை பொறுத்தவரை அனைத்து சமூகத்தினரும் கலந்து வாழ்கிறார்கள். முக்கியமாக குஷ்புவுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள பகுதி. அவர் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்த போது அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் தீவிரமாக இருந்தார்கள். எனவே திருச்சி தனக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார்.
ஆனால் இதுபற்றி அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. திருச்சி தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் போட்டியிட விரும்புகிறார்.
இதுபற்றி குஷ்புவிடம் கேட்ட போது, நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எந்த முடிவும் செய்ய வில்லை. ராகுல் காந்தி என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். ஒரு வேளை நான் போட்டியிட வேண்டும் என்று ராகுல் கட்டளைவிட்டால் போட்டியிடுவேன் என்றார்.