ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க தொல்.திருமாவளவனுக்கு அழைப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த மாதம் 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். ராகுலின் யாத்திரை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். யாத்திரையின் போது சக்தி வாய்ந்த முழக்கங்களை காங்கிரஸ் எடுத்து செல்கிறது.

ராகுலின் யாத்திரை வெற்றி அடைந்து வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையை அடைகிறது. இதையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் மாலை 7 மணிக்கு யாத்திரை நிறைவு விழா நடைபெறுகிறது. இந்தியா நீதி ஒற்றுமை யாத்திரை நிறைவு பெறும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

இதில் பங்கேற்க இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து யாத்திரையின் நோக்கம் வெற்றி அடைந்ததை விளக்கி பேசுகின்றனர்.

யாத்திரை நிறைவு விழாவில் பங்கு பெற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

யாத்திரை இறுதி நிகழ்வை வெற்றி அடைய செய்ய எங்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன். பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் பங்கு பெற வேண்டும். ஒரு மதச்சார்பற்ற வலுவான ஜனநாயகத்தை நிறுவுவதற்கு உதவும் என்று அக்கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

கார்கேவின் அழைப்பை ஏற்ற திருமாவளவன் மும்பைக்கு செல்கிறார். யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools