இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் தனது வெற்றியை பதிவு செய்தார்.
வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் இந்த முறை தாய் சோனியா காந்தியின் நட்சத்திரத் தொகுதியான ரேபரேலியில் முதல் முறையாக நின்ற நிலையில் தாய் சோனியா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வென்ற இரண்டு தொகுதிகளில் ஏதெனும் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே நீடிக்க முடியும் என்ற சூழலில் ராகுல் வயநாட்டை தேர்ந்தெடுப்பாரா அல்லது ரேபரேலியைத் தேர்தெடுப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார். அதன்படி வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி, அளித்த ராஜினாமா கடிதம் ஜூன் 18 அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது என்று மக்களவைச் செயலகம் தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. இதற்கிடையில் வயநாடு தொகுதியில் நடக்கும் மறுதேர்தலில் ராகுலின் தங்கையும் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.