ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாளை தொடங்குகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகிறது. மத்தியில் ஆட்சியை இழந்ததோடு, பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சி பொறுப்பை இழந்தது. அதோடு கட்சியின் மூத்த தலைவர்களும், கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து விலகி வருகிறார்கள்.
இந்த நிலையில் கட்சிக்கு நிலையான தலைவர் ஒருவரை தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் ராகுல் காந்தியை மீண்டும் தலைமை பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு ராகுல் காந்தி இதுவரை உறுதியான பதில் எதுவும் கூறவில்லை. அதே நேரம் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரும் முன்பு சோர்ந்து கிடக்கும் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்க அவர்கள் அனைவரையும் நேரில் சந்திக்க திட்டமிட்டார். இதற்காக அவர் இந்தியா முழுவதும் பாரத யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
இந்த நடை பயணத்தை இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தொடங்கி வடமுனையான காஷ்மீரில் முடிக்க முடிவு செய்தார். அதன்படி இந்த பயணம் தமிழகத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்றடைகிறது.
12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்கான திட்டமிடல் கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது. டெல்லியில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி என பலரும் கன்னியாகுமரியில் முகாமிட்டு பாத யாத்திரை பயணத்தை ஒருங்கிணைத்தனர். இப்பணிகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி பாத யாத்திரை தொடங்குகிறார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார். நாளை காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு இல்லம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுகிறார். பின்னர் காமராஜர் நினைவு இல்லம், காந்தி மண்டபத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதன்பின்பு ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்குகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கதரால் ஆன தேசிய கொடியை அவர் ராகுல் காந்தியிடம் வழங்கியதும் ராகுல் காந்தி பாத யாத்திரையை தொடங்குகிறார்.
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்து செல்லும் ராகுல் காந்தி அங்கிருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். கூட்டத்தில் பாத யாத்திரையின் நோக்கம் உள்பட கட்சியின் திட்டங்கள் குறித்து பேசுகிறார். இக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஸ் பாகல் மற்றும் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தங்குகிறார்.
மறுநாள் 8-ந்தேதி மீண்டும் பயணத்தை தொடங்கும் அவர் 10-ந் தேதி வரை 4 நாட்கள் 56 கிலோ மீட்டர் தூரம் குமரி மாவட்டத்தில் பயணம் செய்கிறார். ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்க கட்சியின் அகில இந்திய தலைமை சார்பில் நிர்வாகிகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் , தொண்டர்கள் அவருடன் நடைபயணம் செல்ல உள்ளனர். இதற்காக கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாகவே தொண்டர்கள், நிர்வாகிகள் முகாமிட்டு உள்ளனர். இது தவிர ராகுல் காந்தி நடை பயணம் செல்லும் வழியில் மக்களை சந்திக்கவும், அவர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் சென்றடையும் வரை சுமார் 1 கோடி மக்களை சந்திப்பார் எனக்கூறப்படுகிறது. கன்னியாகுமரிக்கு ஒரே நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வர இருப்பதால் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன் கன்னியாகுமரியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் பாதைகளிலும் போலீசார் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.