X

ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பங்கேற்கிறது ஆம் ஆத்மி

ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் இம்பால் முதல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் பா.ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டம் ஜலோத் என்ற இடத்தில் நாளை நுழைகிறது. நாளை முதல் 10-ந்தேதி வரை 467 கி.மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஆம் ஆத்மி கட்சி ஏற்றுக் கொண்டது. குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடை பயணத்தில் அதிக அளவிலான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், தலைவர்கள் பங்கேற்பார்கள் என ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில அமைப்பு தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 6700 கி.மீட்டர் தூரம் கொண்ட நடை பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி தொடங்கினார். குஜராத் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 14 மக்களவை தொகுதிகளை உள்ளிடக்கிய பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நுழைவதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தில் தாஹோத், பஞ்ச்மஹால், சோட்டா உதேப்பூர், பரூச், தபி, சூரத், நவ்சாரி ஆகிய மாவட்டங்களில் நடை பயணம் செல்ல இருக்கிறது.