Tamilசெய்திகள்

ராகுல் காந்தியின் சொகுசு பாதயாத்திரை மக்களிடம் எடுபடாது – பா.ஜ.க பொதுச்செயலாளர் சீனிவாசன் பேச்சு

தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் சீனிவாசன் பழனியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிப்பது போல் இருக்கிறது என முன்பு கூறினார். ஆனால் தற்போது மின் கட்டண ரசீதை தொட்டாலே ஷாக் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தமிழன் மீதும் ரூ.1.25 லட்சம் கடன் இருப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. தற்போது ஒவ்வொருவர் மீதும் ரூ.2 லட்சம் கடன் தொகையை உயர்த்தியுள்ளது. மோசமான நிதி நிர்வாகத்தால் ரூ.7 லட்சம் கோடியாக தமிழக அரசின் கடன் தொகை உயர்ந்துள்ளது.

இதனால் அரசே திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ உள்பட அனைத்து அரசு துறை அமைப்பினரையும் ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என கூறி அதை நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றி வருகின்றனர்.

ராகுல்காந்தி இந்தியாவை ஒன்றிணைப்போம் என்று கூறி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இது நிச்சயம் தோல்வியில் தான் முடியும். கேரவன்களுடன் கூடிய சொகுசு யாத்திரையாக இது அமைந்துள்ளது. இதனை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தருவதாக கூறி இன்னும் அதைத் தர முடியாமல் தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. தேர்தல் வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றிய தி.மு.க. அரசின் மீது 420 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்காக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும். தமிழக அரசின் திட்டங்கள் மத்திய அரசின் நிதி உதவியால் மட்டுமே நிறைவேறி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.