உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இன்று முக்கிய தொகுதிகளாக கருதப்படும் அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளுக்கு 5ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய மந்திரியும், பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான ஸ்மிரிதி இரானி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உத்தரபிரதேசத்தில் வாக்குச்சாவடிக்குள் 75 வயதுடைய மூத்த வாக்காளரிடம் அங்கிருந்த தலைமை அதிகாரி ஒருவர், காங்கிரஸ் சின்னம் இருக்கும் இடத்தில் விரலை வைத்து வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியதாக அந்த வாக்காளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தை உஷார் படுத்த எனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் ராகுல் காந்தியின் ஆட்சி தேவையா, இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அமேதி தொகுதி மக்கள் அவரை நிராகரிக்கின்றனர் என்பது தெரிந்து தான் காங்கிரஸ் கட்சியினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவருக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் பிரியங்காவுக்கு, 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை என் பெயர் கூட தெரியாது. ஆனால் இப்போது என் பெயரை ஏதோ சாதனை செய்வது போல தொடர்ந்து கூட்டங்களில் பயன்படுத்துகிறார். தற்போது பிரியங்கா அவரது கணவரின் பெயரை விட, என் பெயரையே அதிகம் உச்சரித்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.