Tamilசெய்திகள்

ராகுலை ராவணாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு – பா.ஜ.க அலுவலங்களை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் அறிவிப்பு

தேர்தல் காலங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் காரசாரமாக மோதிக் கொள்வது வாடிக்கையானது தான். அந்த வகையில் 5 மாநிலங்களில் தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவும், காங்கிரசும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை போஸ்டராக வெளியிட்டு அதில் ‘மிகப்பெரிய பொய்யர்’ என குறிப்பிட்டிருந்தது. மேலும் ஜூம்லா பாய் என்றும் விரைவில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பார்க்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக பா.ஜனதா சார்பில் ராகுல் படத்தை 10 தலைகளுடன் வெளியிட்டு ராவணன் என்று குறிப்பிட்டனர். இந்த இரு படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக பா.ஜனதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த காங்கிரஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டது. உடனடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

சென்னையில் தி.நகரில் பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடக்கிறது. காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.