X

ராஃபாவில் இருந்து 1.4 மில்லியன் மக்களை வெளியேற்றும் இஸ்ரேல் ராணுவம்

கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.

கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.

வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக மற்ற பகுதிகளிலும் தங்களது தாக்குதலை விரிவுப்படுத்தியது. காசாவின் முக்கிய நகரான ரஃபாவை தவிர்த்து ஏறக்குறைய மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காசாவில் உள்ள மொத்த மக்கள் தொகையான 2.3 மில்லியனில் 1.4 மில்லியன் மக்கள் ரஃபா நகரில் உள்ளன. ரஃபா பாதுகாப்பான பகுதியை என மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

இங்கு தாக்குதல் நடத்தப்பட்டால் பொதுமக்கள் என்ன ஆவார்கள் என்று நினைத்து பார்க்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தாக்குல் நடத்தப்பட உள்ளதால், மக்கள் வெளியேறுமாறு உத்தரவிட இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனைக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு ரஃபா எல்லை முக்கியமானதாக திகழ்கிறது. இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாலஸ்தீன மக்கள் உதவிப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏற்கனவே மக்கள் பட்டினி விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 31 ஆயிரம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இஸ்ரேல் தலைமை ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில் “1.4 மில்லியன் மக்கள் அல்லது அதில் குறிப்பிட்டுள்ள அளவு மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வது அவசியம். எங்கே?. சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து அதற்கான ஒரு இடத்தை உருவாக்குவோம். ஹமாஸ் நிர்வகித்து வரும் நான்கு பட்டாலியன்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகவதற்கு மக்களை வெளியேற்றுவது முக்கிய பகுதியாகும்” என்றார்.