வாக்னர் படை ரஷியாவுக்கு எதிராக திரும்பி ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி செய்தது. ஆனால், ஆயுத கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. வாக்னர் படை தலைவர் பெலாரஸ் சென்றுவிட்டார். வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷிய முடித்து வைத்துள்ளது.
இந்த ஆயுத கிளர்ச்சி முயற்சியால் ரஷியப் படைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என நேட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். லிதுவேனியாவில் அடுத்த மாதம் 11 மற்றும் 12-ந்தேதிகளில் நேட்டோ மாநாடு நடைபெற இருக்கிறது. நேட்டோ அமைப்பில் உள்ள தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நேட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோ அமைப்பில் உள்ள 8 நாட்டு தலைவர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது ”ரஷியாவில் ஆயுத கிளர்ச்சி ஏற்பட்டதால், அதன் ராணுவத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். நேட்டோ மாநாடு நடைபெறும்போது ரஷியா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் படைகளை சமாளிக்கும் வகையில் எங்களுடைய தயார் நிலை அதிகப்படுத்தப்படும்.
எந்தவொரு சாத்தியக்கூறான அச்சுறுத்தலுக்கு எதிராக நோட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு திறன் குறித்து தவறான புரிதலுக்கு இடமில்லை” என்றார். லிதுவேனியா கிடானாஸ் நவுஸ்தா ”பெலாரசில் வாக்னர் படை குவிக்கப்பட்டால் அண்டை நாடுகளுக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்” என்றார்.
அதற்கு ”யெவ்ஜெனி பிரிகோசின் தலைமையிலான வாக்னர் படை பெலாரஸில் குவிக்கப்படுமா? அவர்கள் என்ன செய்வார்கள்? என்பது குறித்து பேசுவது முன்னதாகவே எடுக்கப்படும் முடிவாகும்” என்றார் ஸ்டோல்டென்பெர்க். சிறிய ஆயுத கிளர்ச்சி முறியடித்த நிலையில், ரஷிய அதிபர் புதின் தனது படையை விரிவுப்படுத்த வாய்ப்புள்ள நிலையில் கிழக்குப் பகுதியில் தங்களது படைகளை வலுப்படுத்த வேண்டும் என்பதை நேட்டோ தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
ரஷியா உக்ரைன் மீது போர் தாக்குதல் தொடங்கியபோது, நோட்டோ ஸ்லோவாகியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரிய நாடுகளில் தங்களது படைகளை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்பட்டால் லிதுவேனியாவில் நிரந்தரமாக படைகளை நிறுத்த தயார் என ஜெர்மனி அறிவித்திருந்ததது.