உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை சமீபத்தில் கிரிமியா அருகே ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.
இதனால், அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த சந்திப்பை கடைசி நேரத்தில் ரத்து செய்து விட்டார்.
இந்நிலையில், ஜி-20 மாநாட்டின் நிறைவுநாளான நேற்று நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின் போது டிரம்ப்பும் புதினும் ‘சம்பிரதாயமாக’ பேசிக் கொண்டதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விருந்து மேஜையின் அருகே டிரம்ப்பும் அவரது மனைவி மெலினியாவும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அடுத்த நாற்காலிகளில் சீன அதிபர் க்சி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுயான் இருந்தனர்.
அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த புதினுடன் டிரம்ப் சிறிது நேரம் சம்பிரதாயமாக பேசினார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விருந்தின் போது உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் கேள்விகளுக்கு புதின் விளக்கம் அளித்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.