ரஷ்ய அதிபருடனான சந்திப்பை நிராகரித்த டிரம்ப்!

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷியா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அர்ஜென்டினாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதி என ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை அறிவித்திருந்தது. வாஷிங்டனில் இருந்து அர்ஜென்டினாவுக்கு புறப்படும்போது டிரம்ப்பும் நேற்று இதை உறுதிப்படுத்தி இருந்தார்.

ஆனால், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது ரத்து செய்து விட்டார்.

ரஷியாவால் சிறைபிடிக்கப்பட்ட கப்பல்களும், மாலுமிகளும் இன்னும் உக்ரைனுக்கு திரும்பிவராத நிலையில் புதினுடனான சந்திப்பை ரத்து செய்ய தீர்மானித்துள்ளேன். இந்த பிரச்சனை தீர்ந்த பின்னர் கூடிய விரைவில் அர்த்தமுள்ள ஒரு சந்திப்பை நான் எதிர்பார்க்கிறேன் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools