ரஷ்யா உருவாக்கிய கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவு – அக்டோபரில் மக்களுக்கு செலுத்த முடிவு
உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.
இந்த நிலையில், ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன. இதை அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார்.
இதையொட்டி அவர் கூறுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, “அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம். கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம்” என குறிப்பிட்டார்.
தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது.
இதற்கிடையே ரஷியாவில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி புதிதாக 5,482 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்திருக்கிறது.