Tamilசெய்திகள்

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது குறித்து விவாதிக்க ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டம் 3-வது நாளாக நடைபெற்றது.

193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு, உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தி, அங்கிருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா தாக்குதலுக்கு இந்த தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப் பட்டிருந்தது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் மற்றும் பிற அமைதியான வழிமுறைகள் மூலம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டது.

இதைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற ஐ.நா.பொதுச் சபையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை.

இந்த நிலையில் 141 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 5 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. இதையடுத்து பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

முன்னதாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷியா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்து இருந்தது. ஐ.நா. பொதுச்சபையில் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது என்பதால் ரஷியாவுக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.