ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைன் பேரழிவை சந்தித்துள்ளது. முக்கிய நகரங்களை ரஷிய ராணுவம் குண்டு வீசி அழித்துள்ளது. குடியிருப்புகள் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொது சபையில் உக்ரைன் மற்றும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மேற்கத்திய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. ரஷியாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனில் நிலவும் மோசமான மனிதாபிமான விளைவுகளுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுசபையில் 140 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷியாவுடன் இணைந்து பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. போர் நிறுத்தம் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும், இந்த சவால்களில் இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் வரைவு தீர்மானத்தில் இல்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் மோதலைத் தணிப்பதற்கு பங்களிக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கையை மேம்படுத்துவதற்காக விரோத போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு உதவ வேண்டும், மக்களின் துன்பங்களுக்கு உடனடி முடிவு காண, இரு தரப்பையும் ஒன்றிணைக்கவேண்டும்’ என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்தார்.