X

ரஷ்யாவில் இருந்து உரங்கள் மற்றும் தானியங்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா ஆதரவு

ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் தானியங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  ஐ.நா.சபை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநாவிற்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், உக்ரைனில் நடைபெறும் போரினால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை பெரிய அளவில் அச்சுறுத்தலாக உள்ளது என்றார். இதை நிவர்த்தி செய்ய ரஷியாவில் இருந்து தானியங்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்வதை பைடன் அரசு ஆதரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கையாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு  மேல் தடை விதிக்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம்  ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து 90 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது குறையும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். உக்ரைன் பாதுகாப்பை பலப்படுத்துதல், போரிடுவதற்கு ஆயுத விநியோகம் குறித்து விவாதம் நடைபெற்றதாக ரெஸ்னிகோவ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் உதவி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.