Tamilசெய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க இலங்கை நடவடிக்கை

இலங்கையில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்நிய செலாவாணி இருப்பு குறைந்ததால் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. தட்டுப்பாடு காரணமாக, அத்தியாவசிய பணிகள் தவிர தனியார் வாகனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு வருகிற ஜூலை 10-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நின்று விட்டது. மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவிடம் இருந்து உதவிகள் பெற்று வந்த நிலையில் மற்ற நாடுகளிடம் எரிபொருள் வாங்க இலங்கை முயற்சித்து வரு கிறது. குறிப்பாக ரஷியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தது. இதற்காக 2 அமைச்சர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

தள்ளுபடி விலையில் கூடுதல் கச்சா எண்ணை வாங்க பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தொலைபேசியில் பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மகிந்தனானந்த அருத்கமகே கூறும் போது, அதிபர் கோத்தபய ராஜபக்சே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். அப்போது ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது குறித்து கலந்துரையாடப்படும்.

கத்தாரில் இருந்து எரிபொருளை பெறுவதற்கு எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தியாவும் மிகவும் நம்பிக்கையான நிலையில் உள்ளது. வருகிற 10-ந்தேதி முதல் எரிபொருள் வினியோகம் வழக்கம் போல் நடைபெறும் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, கோத்தபய ராஜபக்சே மிக விரைவில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பயணம் செய்ய உள்ளார். இலங்கைக்கு தேவையான எரிபொருளை பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த பயணம் அமைய உள்ளது என்றார்.