Tamilசெய்திகள்

ரஷியாவின் போரால் உணவு பாதுகாப்பில் சவால்கள் ஏற்பட்டுள்ளது – அமெரிக்கா கருத்து

உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசியபோது, உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி வலியுறுத்தினார். இன்றைய சகாப்தம் போருக்கான காலம் அல்ல. இதை பற்றி நான் உங்களிடம் தொலைபேசியில் பேசினேன் என்றார்.

அதற்கு பதிலளித்த புதின், உங்கள் கவலைகள் பற்றி எனக்கு தெரியும். இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார். புதினிடம் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி மோடி கூறியது தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

உக்ரைனில் புதின் என்ன செய்து வருகிறார் என்பதில் அவருக்கு முழு அனுதாபம் கிடைக்கவில்லை என்பது உஸ்பெகிஸ்தானில் இந்தியா, சீனா ஆகிய இரு தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சுட்டிக் காட்டுவதாக நினைக்கிறேன் என்றார். அப்போது இந்தியாவை போல் மற்ற நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக மாற்றிக் கொள்ளும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று ஜான் கிர்பியிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ஜான் கிர்பி கூறும் போது, சர்வதேச சமூகத்தில் இருந்து புதின் தன்னை மேலும் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். உக்ரைனில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்து, ரஷியாவுடன் வழக்கம் போல் வர்த்தகத்தை செய்ய வேண்டிய நேரம் இது என்று நாங்கள் நம்பவில்லை. ரஷியாவிடம் வணிகம் செய்வது சரி என்று எப்படி தீர்மானிக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. புதினை எதிர்த்து குரல் கொடுக்காத மற்றும் கடுமையாக இல்லாத நாடுகள்கூட உக்ரைனில் அவர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது. அங்கு நடப்பது முற்றிலும் கொடூரமானது. புதின் மற்றும் அவரது வீரர்கள் மிக மோசமான முறையில் என்ன செய்தார்கள் என்பது பற்றி சர்வதேச சமூகத்தின் மற்றவர்களுக்கு மேலும் தெளிவாக தெரிவிக்கிறேன் என்றார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் கூறும்போது, உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகள் பற்றி சர்வதேச அளவில் உள்ள கவலைகளை சீனா, இந்தியா தெரிவித்துள்ளது. இந்த போர் உக்ரைன் மக்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மற்றும் மக்கள் மீது பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

ரஷியாவின் போரால் உணவு பாதுகாப்பில் சவால்கள் ஏற்பட்டுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் உணர்வும் ஒன்றாக உள்ளது. இந்த போர், மக்களின் நலன்களுக்கு எதிரான வெளிப்பாடு. இது போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன் என்றார். புதினிடம் போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியதற்கு, இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.