ரவுடியை சுட்டி பிடித்த எஸ்.ஐ கலைச்செல்விக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டு
சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் ரவுடிகளை பிடிக்க இரவு பகலாக அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜையும் போலீசார் தேடி வந்தனர். ரவுடி ரோகித்ராஜ் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வியுடன், போலீஸ் ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் ஆகிய இருவரும் உடன் சென்றனர்.
கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்குள் இன்று அதிகாலை நுழைந்த போலீசார் ரவுடி ரோகித் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர். போலீசார் எச்சரித்தும் தப்பி ஓடுவதிலேயே குறியாக இருந்த ரவுடி ரோகித் ராஜ் போலீசாரை தாக்கியதில் ஏட்டுகள் பிரதீப், சரவணகுமார் இருவருக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ரோகித் ராஜை எஸ்.ஐ. கலைச்செல்வி காலில் சுட்டு பிடித்தார். இதில் வலது காலில் குண்டு பாய்ந்து ரோகித்ராஜ் நடுரோட்டில் சாய்ந்தான். இதையடுத்து எஸ்.ஐ. கலைச்செல்வி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த டி.பி. சத்திரம் எஸ்.ஐ. கலைச்செல்வியை நேரில் அழைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார்.