இந்திய அணி கேப்டன் வீராட்கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம் என 3 நிலையிலும் அவர் சமீபகாலமாக மிகவும் அபாரமாக ஆடி வருகிறார்.
டெஸ்டில் 4-வது வீரராகவும், ஒருநாள் போட்டியிலும் 20 ஓவரிலும் கோலி 3-வது வரிசையில் ஆடி வருகிறார். இந்த நிலையில் உலக கோப்பை போட்டியில் கோலி 4-வது வரிசையில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி யோசனை தெரிவித்தார். மிடில் ஆர்டர் வரிசை பலமாக இருக்க வேண்டுமானால் அவர் ஒரு வரிசை பின்தங்கி 4-வது வீரராக ஆட அணி நிர்வாகம் விரும்புவதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக கோலி கூறும்போது 4-வது வரிசையில் விளையாட தயார். ஆனால் அதனால் எந்தவித மாற்றமும் ஏற்பட்டு விடாது என்றார்.
இந்த நிலையில் கோலியை 3-வது வரிசையில் இருந்து 4-வது வீரராக ஆட சொல்லும் ரவிசாஸ்திரியின் யோசனை முட்டாள்தனமான முடிவு என முன்னாள் வேகப்பந்து வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான அஜீத் அகர்கர் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வீராட்கோலி 3-வது வரிசையில் 32 சதம் அடித்துள்ளார். இந்த வரிசையில் அவர் சிறப்பாக ஆடி வருகிறார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் அவரை 4-வது வீரராக பின்னுக்கு தள்ளி ஆட சொல்வது சரியாக இருக்காது. 3-வது வரிசைக்கு தான் அவர் தகுதியானவர். அவரை 4-வது வீரராக விளையாட சொல்ல விரும்புவது முட்டாள் தனமான முடிவு.
இவ்வாறு அகர்கர் கூறியுள்ளார்.