ரயில்வே வேலை வாய்ப்பு, பா.ஜ.கவின் மற்றொரு மோசடி அறிவிப்பு! – ப.சிதம்பரம் புகார்
மத்திய மந்திரி பியுஷ் கோயல், ரெயில்வேயில் அடுத்த 6 மாதத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், 2 ஆண்டுகளுக்குள் மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ரெயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 976 பதவிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் தற்போது மத்திய அரசு விழித்துக்கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து உள்ளது.
இது பா.ஜ.க. அரசின் மற்றொரு மோசடி அறிவிப்பு ஆகும். பல்வேறு அரசு துறைகளில் ஏராளமான காலி பணியிடங்கள் இருக்கின்றன. அதே சமயம் நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.