ரயில்வே ஓட்டல் ஊழல்! – லாலு பிரசாத், மனைவிக்கு ஜாமீன்
பீகார் முன்னாள் முதல்- மந்திரியும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாகவும் பணியாற்றி இருந்தார்.
லாலுபிரசாத் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஓட்டல்களை இயக்க தனியாருக்கு ஒப்பந்தம் அளித்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல்களை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளார். அதற்கு பதிலாக பினாமி நிறுவனம் ஒன்றின் மூலம் பாட்னா நகரில் 3 ஏக்கர் நிலம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பிரேம்சந்த் குப்தாவின் மனைவி சரளா குப்தா ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.
சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்தது தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் லாலுவுக்கு கடந்த 19-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இதை 28-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. பொதுவான ஜாமின் மனு மீது இன்று (28-ந்தேதி) தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஜாமின் வழக்கு விசாரணைக்கு வந்தது. லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி டெல்லி சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டு நீதிபதி அருண்பரத்வாஜ் உத்தரவிட்டார்.
ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் பிணை தொகையும், அவர்கள் சார்பில் மற்றவர்கள் அதே பிணை தொகையும் வழங்க வேண்டும் என்று ஜாமின் உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார். கால்நடை தீவன வழக்கில் லாலு சிறை தண்டனை பெற்று தற்போது ஜெயிலில் உள்ளார்.