ரபேல் போர் விமான முறைகேடு விவகாரம்! – உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 14-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், “ரபேல் போர் விமான விலை நிர்ணய விவரங்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் தலைமை கணக்கு தணிக்கையரிடம் தெரிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் கூறுகிறது. தலைமை கணக்கு தணிக்கையரின் அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வும் செய்துள்ளது” என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை நாடாளுமன்ற பொது கணக்கு குழுவுக்கு வரவில்லை என்று, அந்த குழுவின் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மறுத்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு தவறாக வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையையும் மீறி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தவறான தகவல் அளித்திருப்பது இதுவே முதல் முறை. மேலும், மோசடியான தீர்ப்பை பெற சுப்ரீம் கோர்ட்டை தவறாக வழி நடத்தி உள்ளது.
செல்லுபடியாகாத அந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டு தனது கண்ணியத்தைக் காத்துக்கொள்வதற்காக இதைச் செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நிவாரண மனு தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் தவறாக நடந்துகொண்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை மீது ஒரு இருண்ட நிழல் விழுந்துள்ள போது, மத்திய அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலிக்கக்கூட முகாந்திரம் கிடையாது.
பொய் வாக்குமூலம் அளித்ததற்காகவும், நீதிமன்றத்தை அவமதித்ததற்காகவும் சுப்ரீம் கோர்ட்டிடம் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக இப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், சக நீதிபதிகளும் ஆங்கில மொழியையும், இலக்கணத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்று மத்திய அரசு சொல்கிறது.
மேலும், நீதிபதிகள் தவறாக புரிந்து கொண்டு விட்டனர் என்றும் அரசு கூறுகிறது.
மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்தி இருக்கிறது. அத்துடன், தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை அளித்து, அதை பொதுக்கணக்கு குழு ஆய்வு செய்திருக்கிறது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையையும் மீறி உள்ளது.
தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை அளிக்கவே இல்லை.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பொறுத்தமட்டில் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு சரியான அமைப்பு அல்ல என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. மரியாதைக்குரிய சுப்ரீம் கோர்ட்டும் இதை ஒப்புக்கொண்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி, தனது தவறான நடத்தைக்காகவும், சுப்ரீம் கோர்ட்டையும், நாடாளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தியதற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் எத்தனை பத்திரிகையாளர் சந்திப்பை வேண்டுமானாலும் நடத்தட்டும். ஆனால், உண்மையை அவர்கள் மறைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.