ரன் குவிப்பில் கோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆசஷ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் 251 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்ட் 185 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் இங்கிலாந்து 1 விக்கெட்டில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் அந்த அணி ஆசஷ் கோப்பையை தக்க வைத்தது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித்தின் அபாரமான பேட்டிங் தான் காரணம்.
3 டெஸ்டில் 5 இன்னிங்சில் 671 ரன் குவித்து உள்ளார். சராசரி 134.20 ஆகும். அதிகபட்சமாக 211 ரன் குவித்துள்ளார். ஒரு இரட்டை சதம் உள்பட 3 செஞ்சுரியும், 2 அரை சதமும் அடித்துள்ளார்.
4-வது டெஸ்டில் முதன் இன்னிங்சில் இரட்டை சதமும், 2-வது இன்னிங்சில் 82 ரன்னும் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் மூலம் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
பந்தில் தில்லுமுல்லு செய்த விவகாரத்தில் தடை பெற்ற சுமித் அதில் இருந்து மீண்டு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளுக்கு பிறகு அதிக ரன் எடுத்த வீரர்களில் ஸ்டீவ் சுமித் 3-வது இடத்தை பிடித்தார். அவர் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் (665 ரன்), இந்திய அணி கேப்டன் விராட்கோலி (610 ரன்) ஆகியோரை முந்தினார்.
கிரகாம்கூச் (இங்கிலாந்து) 752 ரன்னுடன் முதல் இடத்திலும், லாரா (வெஸ்ட் இண்டீஸ்) 688 ரன்னுடன் 2-வது இடத்திலும் உள்ளார்.