ரணில் விக்ரம சிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு – அடுத்த வாரம் நடக்கிறது
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நியமித்தார். அப்போது முதல் இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன.
ராஜபக்சேவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடத்துவதாக சிறிசேனா அறிவித்தார்.
ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. மேலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கி வைத்துள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்கேவும், ராஜபக்சேவும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரி வருகின்றனர்.
ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்கள் மேல் முறையீட்டு கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடை விதித்து கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராஜபக்சே 4-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இலங்கை பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.
இது தொடர்பா இலங்கை பாராளுமன்ற விவகாரங்கள் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இலங்கை பாராளுமன்றம் வருகிற 12-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை அலுவல்கள் முடிவு செய்யப்படும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் தேதி முடிவு செய்யப்படவில்லை. ஒரு வேளை 12-ந்தேதியே கூட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.