X

ரஞ்சி டிராபி கிரிக்கெட் – தமிழகத்தை வீழ்த்தி இமாச்சல பிரதேச அணி வெற்றி

ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் இரண்டாவது சுற்று ஆட்டம் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு – இமாசல பிரதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இமாசல பிரதேசம் அணி 71.4 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆகாஷ் வசிஷ்ட் 35 ரன்களும், மயங்க் தகார் 33 ரன்களும், சுமித் வர்மா 30 ரன்களும் எடுத்தனர்.

தமிழ்நாடு சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை ஆடியது. இமாசல் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கிய தமிழ்நாடு அணி 39 ஓவரில் 96 ரன்னில் சுருண்டது.

இமாசல் அணி சார்பில் வைபவ் அரோரா 3 விக்கெட், மயங்க தகார், ரிஷி தவான் மற்றும் ஆகாஷ் வசிஷ்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 62 ரன்கள் முன்னிலையுடன் இமாசல பிரதேசம் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இரண்டாவது இன்னிங்சில் இமாசல பிரதேசம் 154 ரன்னில் ஆல் அவுட்டானது.

இதைத்தொடர்ந்து. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. இரண்டாவது இன்னிங்சிலும் தமிழக வீரர்கள் சோபிக்கவில்லை. மேலும், இமாசல பிரதேசம் அணியின் ஆகாஷ் வசிஷ்ட் அபாரமாக பந்து வீசினார்.

இறுதியில் தமிழ்நாடு அணி 2வது இன்னிங்சில் 145 ரன்களுக்கு சுருண்டது. முகுந்த் 48 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபா அபராஜித் 43 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் 71 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாட்டை வீழ்த்தியது.

இமாசல பிரதேசம் அணி சார்பில் ஆகாஷ் வசிஷ்ட் 7 விக்கெட்டு வீழ்த்தி தனது அணியை வெற்றி பெற வைத்ததுடன், ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

Tags: sports news