ரஞ்சி டிராபியை நிராகரித்த ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே

ரஞ்சி டிராபியில் மும்பை அணி சர்வீசஸ் அணியை எதிர்கொண்டது. பலமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி சர்வீசஸ் அணிக்கெதிராக திணறியது. முதல் இன்னிங்சில் 114 ரன்னில் சுருண்டதுடன், 2-வது இன்னிங்சிலும் 198 ரன்னில் சுருண்டது.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 46 ரன்களே முன்னிலைப் பெற்றிருந்ததால், சர்வீசஸ் அணி விக்கெட் ஏதும் இழக்காமல் எளிதில் சேசிங் செய்தது.

10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி படுதோல்வியை சந்தித்ததை முன்னாள் வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

மும்பை அணியைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினர்.

அதன்பின் இந்திய அணி வரும் ஐந்தாம் தேதி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. சுமார் இரண்டு வார விடுமுறை இருந்தும் 25-ந்தேதி தொடங்கிய ரஞ்சி டிராபியை நிராகித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த மும்பை கிரிக்கெட் சங்கம் ‘‘இது மும்பை கிரிக்கெட்டிற்கு துரதிருஷ்டவசமானது. நாங்கள் இருவரிடமும் பேசினோம். அப்போது பிசிசிஐ எங்களை ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளது என்று கூறினார்கள்.

எனினும், நாங்கள் தேர்வுக்குழுவினருடன் பேசி உறுதி செய்தபோது, நாங்கள் அதுபோன்ற இந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றனர். அப்படியென்றால் அவர்களை ஓய்வு எடுக்கச் சொன்னது யார்?. இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோவா? அல்லது டிரைனரா? அல்லது அவர்களே ஓய்வு எடுக்க முடிவு செய்தனரா? பிசிசிஐ பின்புறத்தில் இருந்து இப்படி செய்கிறார்களா?.

தேர்வாளர்கள் உள்பட மும்பை கிரிக்கெட் சங்கம் இதை விரும்பவில்லை. அடுத்த உயர்மட்டக்குழுவில் இதுகுறித்து உறுதியாக விவாதிப்போம். முதல்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படலாம்’’ என விளக்கம் அளித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news