ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலியிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி

ரஞ்சி கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.

சேலத்தில் நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் தமிழக அணி மோதியது. இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றது. இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 435 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திரஜித் 187 ரன்களும், விஜய் சங்கர் 130 ரன்களும் அடித்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அன்மோல் மல்ஹோத்ரா 64 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் அஜித் ராம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கப்பட்டது.

2-வது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 109 ரன்களை குவித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு தமிழக அணிக்கு 71 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணி 7 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து ‘சி’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி. இன்னும் ஒரு சில அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டங்களில் விளையாடி வருவதால், அதன் முடிவுகளை பொறுத்தே காலிறுதி போட்டிக்கான அட்டவணை அமையும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports