ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தோல்வி – தமிழ்நாடு பயிற்சியாளரை விமர்சித்த தினேஷ் கார்த்திக்
தமிழ்நாடு அணி ஏழு வருடத்திற்கு பிறகு ரஞ்சி டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை அணிக்கெதிராக கடந்த 2-ந்தேதி மும்பையில் அரையிறுதி போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங் தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 146 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் மும்பை 378 ரன்கள் குவித்துவிட்டது. 106 ரன்னுக்குள் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் 9-வது வீரராக களம் இறங்கிய ஷர்துல் தாகூர் சதம் (109), 10-வது வீரராக களம் இறங்கிய தனுஷ் கோட்டியான் (89 நாட்அவுட்) சிறப்பாக விளையாட மும்பை அணி 378 ரன்கள் குவித்து விட்டது.
பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 2-வது இன்னிங்சிலும் 162 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. 3 நாளில் போட்டி முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு அணியின் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம். நான் எப்போதும் நேரடியாகவே பேசுவேன். முதல் நாள் 9 மணிக்கே (டாஸ் சுண்டப்பட்ட நேரம்) நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என பயிற்சியாளர் குல்கர்னி தெரிவித்திருந்தார்.
அணி தோல்வியடையும்போது கேப்டன் மற்றும் அணி வீரர்களும் பயிற்சியாளர் நிற்க வேண்டும். ஆனால், கேப்டனை குறை கூறுவது சரியல்ல என பயிற்சியாளர் குல்கர்னிக்கு எதிராக விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் குல்கர்னி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் “இது மிகவும் தவறானது. பயிற்சியாளரிடம் இருந்து மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஏழு வருடங்களுக்குப் பிறகு அணியை அரையிறுதி வரை கொண்டு சென்ற கேப்டனுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் பயிற்சியாளர் முற்றிலுமாக கேப்டன் மற்றும் அணியை பஸ்க்கு கீழ் தள்ளி விட்டுள்ளார்” என்றார்.