Tamilவிளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – சவுராஷ்டிராவை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது.
முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாபா இந்திரஜித், விஜய் சங்கர், ஷாருக்கான் ஆகியோர் அரைசதம் அடித்தனர். அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 192 ரன்னில் ஆல் அவுட்டானது. சிராக் ஜானி 49 ரன்னில் ஆட்டம் இழந்தார். தமிழக அணி சார்பில் எம்.சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 36.1 ஓவர்களில் 133 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்னும், பாபா இந்திரஜித் 28 ரன்னும் எடுத்தனர். சவுராஷ்டிரா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டும் சாய்த்தனர். காயம் காரணமாக 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டியிலேயே ரவீந்திர ஜடேஜா அசத்தியுள்ளார்.

இதையடுத்து, சவுராஷ்டிரா அணி வெற்றிபெற 266 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சவுராஷ்டிரா அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சவுராஷ்டிரா அணி சார்பில் ஹர்விக் தேசாய் பொறுப்புடன் ஆடி சதமடித்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அர்பித் வாசவதா 45 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், சவுராஷ்டிரா அணி 206 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றது. தமிழ்நாடு சார்பில் அஜித் ராம் 6 விக்கெட்டும், சித்தார்த் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது அஜித் ராமுக்கு வழங்கப்பட்டது.