ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி – 307 ரன்களுக்கு சவுராஷ்டிரா ஆல் அவுட்
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா – சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த விதர்பா 312 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் விளையாடியது.
நேற்று முன் தினம் 2-வது நாள் ஆட்ட முடிவில் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. பட்டேல் 87 ரன்னுடனும், மன்கட் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மன்கட் மேலும் 5 ரன்கள் சேர்த்து 21-ல் ஆட்டமிழந்தார்.
ஸ்னெல் பட்டேல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 102 ரன்னில் ஆட்டமிழந்தார். 10-வது வீரராக களம் இறங்கிய உனத்கட் 46 ரன்களும், கடைசி வீரராக களம் இறங்கிய சகாரியா 28 ரன்களும் சேர்க்க சவுராஷ்டிரா 307 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வாத் 5 விக்கெட்டும், அக்சய் வகார் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சவுராஷ்டிரா கடைசி விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்க்க, விதர்பா அணியால் முதல் இன்னிங்சில் 5 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற முடிந்தது. 5 ரன் முன்னிலையுடன் விதர்பா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.