ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 7-வது சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. வதோதராவில் நடைபெற்ற ஆட்டத்தில் பரோடா – தமிழ்நாடு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பரோடா முதலில் பேட்டிங் செய்தது.
தமிழ்நாடு அணியின் எம். முகமது பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பரோடா 174 ரன்னில் சுருண்டது. எம். முகமது 7 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தமிழ்நாடு நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தது.
அபிநவ் முகுந்த் 73 ரன்னுடனும், சூர்யபிரகாஷ் 61 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. சூர்யபிரகாஷ் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழந்தாலும் மறுமுனையில் அபிநவ் முகுந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 206 ரன்னில் வெளியேறினார்.
தினேஷ் கார்த்திக் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். 7 விக்கெட் வீழ்த்திய எம். முகமது 56 பந்தில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க தமிழ்நாடு 7 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் பரோடா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.