ரஞ்சி கிரிக்கெட் – தமிழ்நாடு, பஞ்சாப் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது
ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணி தனது 6-வது சுற்று போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டம் இன்றுவரை நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது.
கோனி (5), பால்டெஜ் சிங் (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் தமிழ்நாடு அணி 215 ரன்னில் சுருண்டது. பின்னர் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 328 பந்தில் 29 பவுண்டரி, 4 சிக்சருடன் 268 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் பஞ்சாப் அணி 479 ரன்கள் குவித்தது. தமிழ் நாடு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 107 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
264 ரன்கள் பின்தங்கிய தமிழ் நாடு அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் 37 ரன்னுடனும், சாய் கிஷோர் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. பாபா இந்திரஜித் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் கிஷோர் 9 ரன்னில் வெளியேறினார்.
விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 175 பந்துகள் சந்தித்து 74 ரன்கள் சேர்த்தார். விஜய் சங்கர் 80 பந்தில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க கடைசி நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஆட்டம் முடியும்போது தமிழ் நாடு 121 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆட்டம் வெற்றித்தோல்வியின்று டிராவில் முடிந்தது.