ரஜினி மகள் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கு – வேலைக்கார பெண் ஈஸ்வரியை இரண்டு நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன. வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி திருடிய நகைகளை விற்று அதில் சோழிங்கநல்லூர் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி போட்டிருப்பதும், குடும்பத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை ஆகியவற்றை வைத்துக் கொடுத்திருப்பதுடன் இன்னொரு மகளுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா அளித்த புகாரில் குறிப்பிட்டிருப்பதை விட அதிக அளவில் கூடுதல் நகைகள் வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருப்பது தான் இந்த வழக்கில் போலீசாரை அடுத்த கட்ட விசாரணைக்கு தள்ளி இருக்கிறது.

இதையடுத்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்தபோது தனது சகோதரி சவுந்தர்யா திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய போட்டோ ஆல்பம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

அந்த திருமணத்தின் போது ஐஸ்வர்யா அணிந்திருந்த விலை உயர்ந்த நகைகள் தான் திருடப்பட்டிருந்தன. இதைதொடர்ந்து வேலைக்காரப் பெண் ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், இந்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரிடம் இருந்து 340 கிராம் நகை மீட்கப்பட்டது. திருட்டு நகைகளை வாங்கியதாக வினால்க் சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஐஸ்வர்யா வீட்டு வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசன் ஆகியோரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools