ரஜினி உண்மையிலேயே அழகன் – பாரதிராஜா பாராட்டு

பாரதிராஜா தயாரித்து நடித்து இயக்கி இருக்கும் படம், மீண்டும் ஒரு மரியாதை. இப்படம் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி பாரதிராஜா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மீண்டும் ஒரு மரியாதை என்ற தலைப்பு ஏன்?

விவசாயியாக வாழும் எழுத்தாளர் ஒருவர் தனது வயோதிக காலத்தில் பிள்ளையுடன் இருக்க லண்டன் செல்கிறார். அங்கே வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயலும் ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார். இருவருக்கு இடையேயான பயணம் தான் கதை.

உங்கள் கதாநாயகிகள் எல்லாம் தனித்துவமாக தெரிவார்கள். இதில் புதுமுகத்துடன் நடிப்பது ஏன்?

நான் அறிமுகப்படுத்திய நடிகைகளில் ரதியை தவிர வேறு யாரையாவது கதாநாயகி என்று சொல்வீர்களா? என் கதைக்கு யார் தேவைப்படுகிறார்களோ அவர்களை தான் நடிக்க வைப்பேன். என் கதாநாயகிகள் தேவதை போல இருக்க வேண்டியது இல்லை. குணாதிசயம் தான் ஒருவரை கதாநாயகன், கதாநாயகியாக மாற்றுகிறது. புற அழகு முக்கியம் அல்ல.

நடிப்பில் ஆர்வம் காட்டுவது ஏன்?

மணிரத்னம் முதலில் அழைத்தபோது மறுத்தேன். அரசியலுக்கு வரும் திட்டம் இருக்கிறதா? என்று கேட்டார். நான் இல்லவே இல்லை என்றேன். அப்போது நீங்கள் தான் இதில் நடிக்க வேண்டும் என்று நடிக்க வைத்தார். நான் நடிப்பதற்காக சினிமாவுக்கு வந்தவன் தான். ஆனால் அந்த காலகட்டத்தில் அழகான நடிகர்கள் இருந்தார்கள். எனவே அச்சப்பட்டேன். யோகிபாபு போன்றோர்கள் அதை உடைத்துவிட்டார்கள் இப்போது நடிப்பதற்கு அழகு தேவையில்லை.

ரஜினி இன்னும் கதாநாயகனாக நடிப்பது பற்றி?

ரஜினி உண்மையிலேயே அழகன். நான் பரட்டையாக காண்பித்தபோதே அவரது ஸ்டைல் பிரமாதமாக இருக்கும். சினிமாவை பொறுத்தவரை சிறந்த நடிகன். ஆனால் இன்றுவரை நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாமல், இமேஜ் இல்லாமல் வலம் வருகிறார். விக் கூட இல்லாமல் வெளியில் வருகிறார். அது பாராட்ட வேண்டியது. கொள்கை ரீதியாக நாங்கள் மாறுபட்டாலும் இந்த விஷயத்தில் அவரை நான் பாராட்டியே ஆகவேண்டும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools