அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. 39-வது கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறேன். போலியான ரசீதுகள் கொடுத்து ஏமாற்றுகின்ற நடவடிக்கைகளில் வணிக நிறுவனங்கள் ஈடுபட்டால் அது சட்டப்படி குற்றம். இதுபற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம்.
292 சரக்குகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 24 பொருட்கள் மீதான வரி முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 42 பொருட்களின் சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் நம் மாநிலத்தின் சார்பாக 62 சரக்குகளின் சேவை வரி குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள், வணிகர்களை பாதிக்கும் எந்த வரியையும் விதிக்கப்பட மாட்டாது.
அரசியல் என்பது ஒரு சமுத்திரம். ரஜினி முதலில் அதில் குதிக்கட்டும். அப்போது அவரைப்பற்றி கருத்து சொல்கிறோம். அரசியலில் இல்லாத ரஜினியை பற்றி ஏன் கருத்து சொல்ல வேண்டும்? அரசியலில் இல்லாத ரஜினியும், கமலும் எப்படி இணைய முடியும்? அது ஒரு அனுமானம். மக்கள் செல்வாக்கு பெற்ற, மக்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிய மக்களுக்கான அரசுதான் அ.தி.மு.க.
ரஜினியை பொறுத்தவரை அ.தி.மு.க.வை குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. அதனால் எதையும் கூற முடியாது. ரஜினி அவருடைய கொள்கை, லட்சியத்தை கூறுவதில் தவறில்லை.
மு.க.ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல் சமூக வலைதளங்களில் வரும் புகைப்படம் ஒரு கிராபிக்ஸ். சிகப்பு கம்பளம், ஷுவோடு நடப்பவர்தான் ஸ்டாலின். வெறும் காலோடு நடந்து செல்பவர்தான் தமிழக முதல்-அமைச்சர்.
2011, 2016 ஆண்டுகளில் எப்படி அ.தி.மு.க அரசு அமைந்ததோ அதேபோல் 2021-ம் ஆண்டும் அ.தி.மு.க. அரசு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.