Tamilசினிமா

ரஜினியை கிண்டல் செய்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கமல்ஹாசன்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. பிரதீப் இயக்கி உள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் சுதந்திர தினத்தையொட்டி திரைக்கு வருகிறது. கோமாளி படத்தின் டிரெய்லர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் சர்ச்சை காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

ஜெயம் ரவி 16 வருடங்கள் கோமாவில் இருக்கிறார். பின்னர் அவர் குணமாகி எழுந்து பார்க்கும்போது இது எந்த வருடம் என்று கேட்கிறார். அதற்கு யோகிபாபு இது 2016-ம் ஆண்டு என்கிறார். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசும் காட்சி ஓடிக்கொண்டு இருக்கும். அதை பார்த்ததும் ஜெயம் ரவி இது 1996-ம் வருடம்தான் 2016 அல்ல என்பார். இந்த காட்சி ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருப்பதை கேலி செய்வது போல் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.

ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கோமாளி டிரெய்லரை கண்டித்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோமாளி பட டிரெய்லரை பார்த்து விட்டு படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி டிரெய்லரை பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். ‘நட்பின் வெளிப்பாடா, நியாயத்தின் குரலா’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எதிர்ப்பு காரணமாக படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்படுமா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *