ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வாய்ப்புண்டா? – கமல்ஹாசன் விளக்கம்
தமிழ் திரையுலகில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் – க்கு அடுத்து சினிமாவின் ஜாம்பவான்களாக இருப்பது கமல்ஹாசன் மற்றும் ரஜினி மட்டும் தான். இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். பலப் பேர் இந்த சினிமாத்துறையில் நாயகர்களாக வரவேண்டும் என்று வந்து சிலப்படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன எத்தனையோ நடிகர்களை பார்த்து இருக்கிறோம். 1975 ஆரம்பித்த திரைப்பயணத்தை இன்றும் 50 வருடங்களாக தன்னுடைய நிலையை தக்கவைத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.
கமல்ஹாசன் தமிழ் சினிமாவை உலகமெங்கும் கொண்டு சென்ற ஒரு உலகநாயகன், தான் நடிக்கும் படங்களாக இருக்கட்டும், இல்லை இயக்கும் படங்களாக இருக்கட்டும் எது செய்தாலும் அதனை உலக தரத்தில் செய்வது அவரது வழக்கம். 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார்.
இந்த இருஜாம்பாவன்களும் அவர்களின் இளம் பருவத்தில் இணைந்து 16 படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பில் வெளிவந்த அபூர்வ ராகங்கள்,அவள் அப்படித்தான், 16 வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தில்லு முல்லு ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் ஹிட் ஆனது.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா துறையில் இருவருக்கும் ஒரு பெரிய மார்க்கெட் உருவாகியதும் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்தனர். படத்தின் ஒன்றாக நடிக்காவிட்டாலும் கலை நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொள்வர். சமீபத்தில் கமல்ஹாசன் , அவர் ஏன் ரஜினிகாந்துடன் இத்தனை வருடங்கள் நடிக்கவில்லை, எதிர்காலத்தில் நீங்கள் ஒன்றாக நடிப்பதற்கோ இல்லை கவுரவ தோற்றத்தில் நடிப்பதற்கு எதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு அவர் ” நாங்கள் இணைந்து நடிப்பது என்பது புதிதில்லை, நாங்கள் பலப் படங்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம். ஆனால் ஒருக்கட்டத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தோம். நாங்கள் போட்டியிடும் போட்டியாளர்கள் கிடையாது. துறையில் எப்பொழுதும் போட்டிகள் நிலவுவது சகஜம் தான், அவருடைய பாதை வேறு என்னுடைய பாதை வேறு. இதை நாங்கள் இப்பொழுதல்ல எங்களுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்ட முடிவு” என்றார்.