Tamilசினிமா

ரஜினியுடன் மீண்டும் இணைவேன் – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நம்பிக்கை

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இவர் தயாரிப்பில் இவரது உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரீஷ் சரவணன் இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தின் பூஜை இன்று காலை தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்‌ஷனும், லாஸ்லியாவும் நாயகன்- நாயகியாக நடிக்கிறார்கள். கே.எஸ். ரவிக்குமாரும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்த பூஜையில் பத்திரிகையாளர்கள், கே.எஸ். ரவிக்குமாரிடம் ரஜினியை வைத்து மீண்டும் இயக்குவீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு கே.எஸ். ரவிக்குமார் கூறியதாவது ரஜினி சார் வாரத்துக்கு ஒருமுறை என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டு தான் இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு நேரில் சந்திக்க சென்றேன். அப்போது எங்கள் கூட்டணியில் அறிவிக்கப்பட்டு நின்றுபோன ராணா படத்தின் கதையை மீண்டும் சொல்லுமாறு கேட்டார்.

நான் ஒரு நாள் அவகாசம் கேட்டு கதையை நன்கு படித்து விட்டு மீண்டும் சென்று முழுக்கதையையும் கூறினேன். மிகவும் ஆர்வமுடன் கேட்டவர் கதையின் வேகம் அப்படியே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இதை படமாக எடுக்கலாம் என்று கூறினார். எனவே அது படமாவது ரஜினி கையில் தான் இருக்கிறது. இணைய வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.