X

ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர்.

ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் 170- வது படத்தை ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், போலி என்கவுண்டர்களுக்கு எதிரான கதைக்களத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ரஜினிக்கு இணையான முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களை தேர்வு செய்து வைத்த நிலையில் தற்போது இந்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் 1991- ம் ஆண்டு வெளியான ‘ஹும்’ படத்திற்கு பிறகு ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Tags: tamil cinema