X

ரஜினிகாந்த் படத்தில் சூரி!

ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா ஆகியோரும் உள்ளனர். டப்பிங், ரீ ரிக்கார்டிங், இசை கோர்ப்பு பணிகள் நடக்கின்றன. படம் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வருகிறது.

அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிவா இயக்குகிறார். இவர் கார்த்தியின் சிறுத்தை, அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை எடுத்து பிரபலமானவர். புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது ரஜினிகாந்துக்கு 168-வது படம். கிராமத்து பின்னணியில் அதிரடி படமாக தயாராகிறது.

விவசாய பிரச்சினைகளை படத்தில் வைத்திருப்பதாகவும், இதில் ரஜினிகாந்த் வேட்டி கட்டி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படத்தில் 2 கதாநாயகிகள் என்றும் இதற்காக ஜோதிகா, மஞ்சு வாரியர் ஆகியோரிடம் பேசி வருவதாகவும் தகவல் பரவி உள்ளது.

கீர்த்தி சுரேசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சூரியை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் சூரிக்கு ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும்.