கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்ம கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. இப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டது.
அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது. மேலும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிலதினங்களுக்கு முன்பு காந்தாரா திரைப்படம் பார்த்த நடிகர் ரஜினி, “தெரிந்தை விட தெரியாதது தான் அதிகம் என்பதை இதை விட சிறப்பாக யாராலும் சினிமாவில் சொல்ல முடியாது. எழுத்தாளர், இயக்குனர், நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுகள். இந்திய சினிமாவில் தலைச்சிறந்த படைப்பை கொடுத்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தை பாராட்டிய ரஜினியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து காந்தாரா படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி வாழ்த்து பெற்றார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, நீங்கள் எங்களை ஒரு முறை புகழ்ந்தால், அது நூறு முறை புகழ்ந்த மாதிரி, நன்றி ரஜினிகாந்த் சார். எங்களின் காந்தார திரைப்படத்திற்கான உங்கள் பாராட்டுக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் முத்திரை டயலாக்கான ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்ற வசனத்தை போன்று கந்தாரா படக்குழு நன்றி கூறி பதிவிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.