Tamilவிளையாட்டு

ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடந்தால், மாயாஜாலங்கள் நடக்காது – விராட் கோலி பேட்டி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. கொரோனா பிரச்சினை தணிந்ததும் கிரிக்கெட் போட்டிகளை உரிய பாதுகாப்புடன் மீண்டும் தொடங்குவதில் எல்லா கிரிக்கெட் வாரியங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.

நோய் தொற்றில் இருந்து அனைத்து தரப்பினரையும் பாதுகாக்கும் பொருட்டு ரசிகர்கள் அனுமதியின்றி பூட்டிய ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, போட்டி நடந்தால் போதும் என்ற நிலைக்கு பல நாட்டு வீரர்கள் வந்து விட்டனர். எனவே கொரோனா பாதிப்பு குறைந்ததும் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டிகள் அரங்கேற அதிக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-

தற்போதைய சூழ்நிலையை பார்க்கையில் ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால் இதனை ஒவ்வொரு வீரரும் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை. ஏனெனில் ஆர்வம் மிக்க ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்னிலையில் விளையாடி நாங்கள் எல்லாம் பழக்கப்பட்டு விட்டோம். போட்டியில் வீரர்கள் மிகுந்த தீவிரம் காட்டுவார்கள் என்பது தெரியும். ஆனால் வீரர்களை பார்த்து ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரம், உற்சாகம் மற்றும் ஆட்டத்துக்குரிய பதற்றம் போன்ற உணர்வுகள் ரசிகர்கள் இல்லாத ஸ்டேடியத்தில் கிடைக்காது. அதுபோன்ற உணர்ச்சிகளை உருவாக்குவது என்பது மிகவும் கடினமாகும்.

ரசிகர்கள் இல்லை என்றாலும் போட்டி நடைபெற தான் செய்யும். ஆனால் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் சூழலில் நடக்கும் மாயாஜாலங்கள் அவர்கள் இல்லாத நிலையில் நடக்குமா? என்பது சந்தேகம் தான். நாங்கள் எப்பொழுதும் போல் கிரிக்கெட் போட்டியை சிறப்பாகவே விளையாடுவோம். ஆனால் அதுபோன்ற மாயாஜாலத் தருணங்களை கொண்டு வருவது என்பது கடினமானதாகும். நான் நேர்மறையான சிந்தனையுடனும், மகிழ்ச்சியுடனும் எனது வாழ்க்கையை எதிர்நோக்கி வருகிறேன். இதனால் நான் எப்போது களத்துக்கு திரும்பினாலும், எந்த இடத்தில் விட்டுச்சென்றேனா? அந்த இடத்தில் இருந்து தொடங்க சிறப்பான நிலையில் இருப்பேன் என்பது எனக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *