ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை ரித்விகா
பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்விகா. இப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றார்.
இவர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இதில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் அவதூறாக பேசி பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ரித்விகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க.
ஒருவகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி.
பி.கு – தலித் பெண்கள் என்னை விட அழகு” என்று ரித்விகா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.