விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. விஜய் படங்கள் ரிலீசாகும்போது எதிராக ஹேஷ்டேக்குகளை அஜித் ரசிகர்கள் உருவாக்குவதும், அஜித் படங்கள் வரும்போது விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்வதும் வழக்கமாக நடந்தன. இந்த மோதல் கவலை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அவர்கள் சண்டையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், விஜய் கோட்டு சூட்டு அணிந்து கலந்து கொண்டது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஜய், “நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணலாம் என்று கோட் சூட் அணிந்து வந்தேன். எனக்கு இது பொருத்தமாக உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு தொகுப்பாளர் பிரமாதமாக உள்ளது என்றார்.
விஜய் பேச்சை, அஜித் ரசிகர்கள் வரவேற்று உள்ளனர். நண்பர் அஜித் என்று பேசிய வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இருவரின் ரசிகர்களும் நண்பர் அஜித் என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகிறார்கள். விஜய், அஜித் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இருவரின் ரசிகர்களும் ஒன்று சேர்ந்ததை பலரும் பாராட்டி உள்ளனர்.