ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற ‘கர்ணன்’ பட பாடல்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கர்ணன் படத்தில் இடம்பெறும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்கிற பாடல் கடந்த பிப்.18-ந் தேதி வெளியிடப்பட்டது. பறை இசையை மையமாகக் கொண்ட கிராமியப் பாடலான இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் பாடல்களை விட இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவந்துள்ளது.
அனிருத் இசையில் காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற ‘ரெண்டு காதல்’ எனும் பாடல் காதலர் தினத்தன்று யூடியூபில் வெளியிடப்பட்டது. இப்பாடலை 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அயலான் படத்தில் இடம்பெற்ற ‘வேற லெவல் சகோ’ எனும் பாடல் கடந்த பிப்.17-ந் தேதி வெளியிடப்பட்டது. இப்பாடலை 29 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த இரண்டு பாடல்களும் மேற்கத்திய இசை பாணியில் உருவாக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த இரு பாடல்களுக்கு பின் பிப்.18-ந் தேதி வெளியிடப்பட்ட ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலை சுமார் 90 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் மேற்கத்திய இசை பாடல்கள் அதிகம் வந்தாலும், கிராமிய பாடல்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் நிரூபித்துள்ளது.